சிங்கக் கொடி ஏந்தினார் சம்பந்தன்! பொது மன்னிப்புக் கோரினார் மாவை சேனாதிராஜா!

அதிசய உலகம்

next........

மேலும்..

யாழ்ப்பாணத்தில் ஐதேகவுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய மே நாள் பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிங்கக்கொடியை ஏந்தியதற்காக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற அனைத்துலக ஊடக சுதந்திர நாள் நிகழ்வில் உரையாற்றிய போதே, இரா.சம்பந்தனுக்காக மாவை சேனாதிராசா பொதுமன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மே நாள் பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுமென்றே சிங்கக்கொடியைக் கையில் ஏந்தவில்லை, என்றும் அவரது கையில் சிங்கக்கொடி திட்டமிட்டுத் திணிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்தச் சம்பவத்திற்காக தான் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்கு உரையாற்றிய மாவை சேனாதிராசா,

“மே நாள் பேரணியில் ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள் என்று இரவிரவாக தொலைபேசி எடுத்து கேட்கிறார்கள்.

சிறிலங்காவின் தேசியக்கொடி மீது எமது மக்களுக்கு அத்தனை அதிருப்தி இருக்கிறது.
இவ்வாறானதொரு நிகழ்ச்சி மே நாள் பேரணி நிகழ்ச்சி நிரலில் இருக்கவில்லை.

இது ஒரு திணிக்கப்பட்ட சம்பவமாகவே அமைந்தது.

அந்தச் சம்பவம் நடந்தபோது நான் அந்த மேடையில் இருக்கவில்லை.

விடயத்தை தெரிந்து கொண்ட போது மிகவும் சங்கடமாக இருந்தது.

நாம் தமிழ் உணர்வாளர்கள், தேசியத்தின் மீது பற்றுக்கொண்டவர்கள், தமிழர்களுடைய தேசத்தை கேட்கும் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்தத் தேசியக்கொடியை ஒரு காலமும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

தந்தை செல்வா அதை சொல்லித் தந்தார். அதனால் ஏற்பட்ட இந்த உணர்வு என் உள்ளத்தையும் பாதிக்கிறது.

இதனால் இந்த நிகழ்வில் நடந்த சம்பவத்திற்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கோர விரும்புகின்றேன்.“ என்று கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்